புலம் பெயர் தமிழர் நலவாரியம் அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துபாய் தமிழர்கள் பாராட்டு

துபாய். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்‌. இந்தியாவிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழக தொழிலாளர் ஒருவர் வெளிநாட்டில் உயிரிழந்தால் அவர் உடலை தாயகம் கொண்டு அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும். தாயகம் திரும்பினால் தொழில் தொடங்க கடன் உதவி வழங்க வேண்டும். போலி  ஏஜென்ட்டுகளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான கட்டணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 ‘வெளிநாட்டு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட வேண்டும்  என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி துபாய் தமிழர்கள் கூறுகையில், ‘‘எங்கள் கோரிக்கை குறித்து 2 ஆண்டுகளுக்கு முன் துபாய் வந்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவாக அளித்தோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை. மனுவை கிடப்பில் போட்டார். இந்நிலையில், வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நிலையை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க, ‘புலம் பெயர் தமிழர் நலவாரியம்,’ தோற்றுவிக்கப்படும். இந்த வாரியத்துக்காக மூலதன செலவினமாக ரூ.20 கோடி ஒதுக்கப்படும்,’ என்றும் நேற்று அறிவித்துள்ளார்.  

இதனால், வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,’ என்று தெரிவித்துள்ளனர். துபாய் தமிழ் அமைப்பான ஈமானின் தலைவர் ஹபிபுல்லா கூறுகையில், ‘தமிழர்களின் நிலை அறிந்து, உடனடியாக ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி. எங்களின் நீண்டகால கோரிக்கையை பதவியேற்ற சில நாட்களில் அவர் நிறைவேற்றி கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: