ஒவ்வொரு மாவட்டத்திலும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் துவங்கும்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர்: கரூர் கொளந்தா கவுண்டனூரில் சேதமடைந்துள்ள அடுக்குமாடி  குடியிருப்புகளை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டி:

இந்த குடியிருப்பில் 112 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதை புதுப்பித்து தர கலெக்டர் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி  விரைவில் புதிய வீடு வழங்கப்படும். கடந்த 2006 முதல் 2011 வரை திமுக அரசு கொண்டு வந்த அனைத்து மின் திட்டங்களையும் கடந்த கால அதிமுக அரசு செயல்படுத்த தவறியது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்தத் திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி திட்ட மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அனல் மின்நிலைய உற்பத்தியை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டு தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினர். ஆனால் தற்போது தமிழக முதல்வர் அதிகமான செலவுகளை குறைத்து, குறைந்த செலவில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரைவில் தமிழக முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். அதன்பின் பிற மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். சூரிய ஒளி மூலம் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: