லீவிஸ்-ஜெய்ஸ்வால் பவர் பிளேயிலேயே கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்துவிட்டனர்: கேப்டன் சஞ்சு சாம்சன் பாராட்டு

அபுதாபி: ஐபிஎல் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 47வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நாட்அவுட்டாக 101 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். டூபிளசிஸ் 25, ரெய்னா 3, மொயின்அலி 21, ராயுடு 2 ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

ஜடேஜா 15 பந்தில், 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் 190 ரன் என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு எவின் லீவிஸ்-ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கம் அளித்தனர். 12 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 27 ரன் எடுத்த லீவிஸ் தாகூர் பந்தில் கேட்ச் ஆனார். ஜெய்ஸ்வால் 21 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 28 ரன்னில் ஆட்டம் இழக்க மறுபுறம் ஷிவம் தூபே 31 பந்தில் அரைசதம் விளாசினார்.

17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்த ராஜஸதான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 64 (42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), பிலிப்ஸ் 14 ரன்னில் களத்தில் இருந்தனர். சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 12வது போட்டியில் சென்னை 3வது தோல்வியை சந்தித்தது. மறுபுறம் ராஜஸ்தான் 5வது வெற்றியுடன் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் கூறியதாவது: இன்று எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் (லீவிஸ்-ஜெய்ஸ்வால்) பவர் பிளேயிலேயே கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்துவிட்டனர்.

ஜெய்ஸ்வால், ஷிவம் துபே சிறப்பாக பேட்டிங் செய்தனர். கெய்க்வாட் நம்பமுடியாத வகையில் பேட்டிங் செய்தார். அவரை போன்ற ஒரு பேட்ஸ்மேனை பார்த்து பயப்படுகிறோம். இந்த வகை பேட்ஸ்மேன்களை நாம் மதிக்க வேண்டும். நாங்கள் அடுத்த போட்டியை மட்டுமே பற்றி நினைக்கிறோம். பிளேஆப் பற்றி சிந்திக்க வில்லை, என்றார். சிஎஸ்கே கேப்டன் டோனி கூறுகையில், டாசை இழந்தது பின்னடைவு. 190 ரன் நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி பேட்டிங்கிற்கு சாதகமாகிவிட்டது.

பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் பவர்பிளேவில அவர்கள் ஆட்டத்தை எடுத்துவிட்டனர். ருதுராஜ் அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். டுவைனும் தீபக்கும் இன்று இல்லை, நிச்சயமாக நான் அவர்களை தவறவிட்டேன். இருவரும் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், என்றார்.

பிட்ஸ்...

* நேற்று 101 ரன் விளாசிய ருதுராஜ்,  நடப்பு சீசனில் முதல் பேட்ஸ்மேனாக 500 ரன்னை தாண்டினார். அவர் 508  ரன்களுடன் ஆரெஞ்ச் தொப்பியை கைப்பற்றினார். கே.எல்.ராகுல் 489, சாம்சன் 480  ரன் எடுத்துள்ளனர்.

* ஐபிஎல் வரலாற்றில் 180 பிளஸ் ரன் குவித்த  போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9வது முறையாக தோற்றுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் 12 முறை இந்த  வகையில் தோல்வி கண்டுள்ளது.

* ஐபிஎல்லில் சாம்கரன் 5வது முறையாக 50  ரன்களுக்கு மேல் வழங்கி உள்ளார். இதற்கு முன் ஷமி, உமேஷ்யாதவ் 5 முறை 50  ரன்னுக்கு மேல் கொடுத்துள்ளனர்.

Related Stories: