கணவர் இறந்ததால் மன உளைச்சல் 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: திருமுல்லைவாயிலில் திடீர் பரபரப்பு

ஆவடி: கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன், கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக்நகரை சேர்ந்தவர் முனிசாமி (40). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஐஸ்வர்யா (34). இவர்களுக்கு கமலேஷ் (4), ரக்‌ஷன் (2) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 22ம் தேதி முனிசாமி, வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, ஆவடியில் ரயிலில் அடிபட்டு இறந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா, கணவர் முனிசாமியை நினைத்து அழுது புலம்பியபடியே இருந்துள்ளார். 2 குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என கடும் மனஉளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் ஐஸ்வர்யா, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியில் வந்தார். திருமுல்லைவாயில் பச்சமையம்மன் கோயில் வளாகத்துக்கு வந்த அவர், அங்குள்ள 20 அடி ஆழமுள்ள உரை கிணற்றில் 2 மகன்களுடன் குதித்தார். இதை பார்த்ததும், அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த 2 பேர், கயிறு மூலமாக கிணற்றில் இறங்கி, 2 குழந்தைகளை மீட்டனர். ஆனால் அவர்களால், ஐஸ்வர்யாவை மீட்க முடியவில்லை. தகவலறிந்து ஆவடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறங்கி ஐஸ்வர்யாவை உயிருடன் மீட்டனர். பின்னர் 3 பேரை, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பினர். இதற்கிடையில், இதுபற்றி அறிந்ததும், அவரது உறவினர்கள், கோயிலுக்கு வந்தனர். அவர்கள், கதறி அழுதனர். புகாரின்படி திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>