டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன் அசத்தல்

ஷார்ஜா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசியது. ஸ்மித், தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 35 ரன் சேர்த்தது. தவான் 24 ரன் எடுத்து வெளியேற, ஷ்ரேயாஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து ஸ்மித் - கேப்டன் பன்ட் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். ஸ்மித் 39 ரன் (34 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

ஒரு முனையில் பன்ட் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, சக வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர். லலித், அக்சர் டக் அவுட்டானது டெல்லி ஸ்கோர் வேகத்துக்கு பின்னடைவை கொடுத்தது. ரிஷப் பன்ட் 39 ரன் (36 பந்து, 3 பவுண்டரி), ஆவேஷ் கான் 5 ரன் எடுத்து ரன் அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன் மட்டுமே எடுத்தது. கேகேஆர் பந்துவீச்சில் நரைன், பெர்குசன், வெங்கடேஷ் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து வென்றது. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 36 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 7வது வீரராகக் களமிறங்கிய சுனில் நரைன் 10 பந்தில் 21 ரன் விளாசி (1 பவுண்டரி, 2 சிக்சர்) வெற்றிக்கு உதவினார். கில் 30, வெங்கடேஷ் 14, தினேஷ் 12 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் ஆவேஷ் கான் 3 ஓவரில் 13 ரன்னுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். நார்ட்ஜ், அஷ்வின், லலித், ரபாடா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆல் ரவுண்டராக ஜொலித்த நரைன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: