மாணவர்களின் பணம் சுரண்டல் முன்னாள் துணை வேந்தரின் ரூ.19 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: பல்கலை.யில் படித்த மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றிய பண மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் துணை வேந்தரின் ரூ. 19 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஸ்ரீவாரி கல்வி நிறுவனத்தின் துணை வேந்தராக இருந்தவர் மதுக்கர் அங்கூர். கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில், கல்வி கட்டணம், விடுதி கட்டணம் என்ற பெயரில் 4,500 மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து பல்கலைக் கழக வங்கி கணக்கில் மொத்தம் ரூ.107 கோடி வரை வசூலித்தார்.

பின்னர், அந்த பணத்தை வங்கி கணக்கில் இருந்து தனது பெயருக்கும், குடும்பத்தினரின் பெயருக்கும் மாற்றினார். புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீஸ் அவர் மீது வழக்கு பதிந்தது. இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குற்றம் நடந்திருப்பதால், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், மதுக்கர் அங்கூர், பிரியங்கா அங்கூர், ரவிக்குமார், ஸ்ருதி, பாவனா திப்பூர் உள்ளிட்ட 6 பேருக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள பணம், 6 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 நிலங்கள் என மொத்தம் ரூ.19.43 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.

Related Stories:

>