ராணுவ வீரர்கள் தங்குவதற்காக கிழக்கு லடாக்கில் 8 தங்கும் இடங்களை கட்டியது சீனா: எல்லையில் இந்திய ராணுவம் உஷார்

புதுடெல்லி: ராணுவர் வீரர்கள் தங்குவதற்காக கிழக்கு லடாக்கில் எட்டு தங்கும் இடங்களை சீன ராணுவம் கட்டியுள்ளதாக பிரபல ஆங்கில நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கிழக்கு லடாக் எல்லை தகராறு மற்றும் அதைத் தீர்ப்பதற்கான தொடர்ச்சியான ராணுவ மற்றும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், சீன மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) எல்லையில் அதிகளவில் ராணுவ துருப்புகளை குவித்து வருகிறது.

குறிப்பாக, கட்டுப்பாட்டு கோட்டிற்கு (எல்ஏசி) அருகே அதன் விமானத்தளங்களை வலுப்படுத்தி வருகிறது. இதுகுறித்து பிரபல ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், ‘கிழக்கு லடாக் அருகே கிட்டத்தட்ட எட்டு இடங்களில் சீனா தனது வீரர்கள் தங்குவதற்கான கட்டுமானங்களை கட்டியுள்ளது. இந்திய எல்லையான வடக்கு பியூ, ஹாட் ஸ்பிரிங்ஸ், சாங் லா, தாஷிகோங், மான்ஸா, சுரூப் ஆகிய இடங்களுக்கும் கரகோரம் பாஸுக்கு அருகிலுள்ள வஹாப் ஜில்காவில், தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளது. மற்றொரு ஏஜென்சி செய்தியில், ‘ஜின்ஜியாங் பிராந்தியத்தில் 16,000 அடிக்கு மேல் சீன ராணுவம் இரவுநேர போர் பயிற்சியை மேற்கொண்டது.

கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் எடுத்து வரும் ஒருதலைபட்சமான முயற்சிகளுக்கு இந்தியா கடுமையாக பதிலளித்தும், அதன் ராணுவ உள்கட்டமைப்பை வேகமாக முன்னெடுக்கிறது. கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறலை எதிர்க்கும் வகையில், லடாக் அருகே சுமார் 50,000 துருப்புக்கள், போர் விமானங்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்களை இந்திய ராணுவம் நிலை நிறுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: