திருச்சுழி பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்-பருவமழை கை கொடுக்குமா?

திருச்சுழி :  திருச்சுழி  பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பருவ மழை கை கொடுக்குமா என விவசாயிகள்  அச்சத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வருடம் பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும்பாலன இடங்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. தென் மாநிலப் பகுதியில் விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தற்போது  திருச்சுழி பகுதியில் நிலங்களை செம்மைப்படுத்தி மழைக்காக காத்திருந்த நிலையில் சில தினங்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து, மிளகாய் மற்றும் பருத்தி போன்ற பயிர்கள் விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பருவமழை கை கொடுக்காமல் போனால் ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவளித்தது வீணாகி விடுமென கூறி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பாலமுருகன் கூறுகையில், `` எங்கள் கிராம பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி, உளுந்து, மக்காச்சோளம் போன்ற பயிர்களை விதைத்துள்ளோம். ஓரளவிற்கு மழை பெய்து வருகிறது. இருப்பினும் பயிர்கள் வளர்ச்சியடைய தொடர்மழை பெய்யாமல் போனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும்’’ என்று கூறினார்.

Related Stories:

>