பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

துரைப்பாக்கம்: நாடாளுமன்ற தேர்தலின்போது பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என்ற புகாரில், பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு அந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக 8 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பூத் ஏஜென்ட்களாக இருந்து பணியாற்றினர். இவர்களுக்கு கட்சிகள் சார்பில் சாப்பாடு, பணம் வழங்கப்பட்டது. தென்சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் முத்துமாணிக்கம். இவர், கடந்த 20ம் தேதி துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில், நாடாளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் பேசிகொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பாஜகவை சேர்ந்த டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உள்ளிட்ட 5 பேர், பூத் ஏஜென்ட் வேலை செய்ததற்கான பணம் இன்னும் தரவில்லை என முத்துமாணிக்கத்திடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், முத்துமாணிக்கத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மாவட்ட பொதுச்செயலாளர் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முத்துமாணிக்கம் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின்படி 294 பி-ஆபாசமாக பேசுதல், 147 சட்ட விரோதமாக கூடுதல், 448 அத்துமீறி நுழைதல், 427 பொருட்களை சேதப்படுத்துதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

The post பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம் தரவில்லை என புகார்; பாஜக மாவட்ட பொதுச்செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல்: 8 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: