5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு.!

ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் 28ம்தேதி சென்னை புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அவரது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டுக்கு வந்துள்ள பேரறிவாளனுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி அவ்வப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிகிச்சைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு பரோல் நீட்டித்து வழங்க வேண்டும் என ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருணத்தில் மனு அளித்து வந்த நிலையில் இதற்கு முன்பு 4 முறை தமிழக அரசு பரோல் நீட்டித்து உத்தரவிட்டு இருந்தது.

தற்போது மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்நிலையில் மேலும் 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை பரோல் காலம் முடிந்து புழல் சிறைக்கு பேரறிவாளன் செல்ல இருந்த நிலையில் நேற்று 5வது முறையாக 30 நாள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: