செம்பட்டி அருகே செவ்வந்தி பூக்கள் அமோக விளைச்சல்

சின்னாளபட்டி : செம்பட்டி அருகே போடிகாமன்வாடி ஊராட்சி பகுதியில் செவ்வந்தி பூக்கள் அமோக விளைந்துள்ளது. 1 கிலோ பூ 30 ரூபாய்க்கு விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராமம், ஊத்துப்பட்டி, கலிக்கம்பட்டி, கோட்டைப்பட்டி, காமலாபுரம், பெருமாள்கோவில்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் செம்பட்டி அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மல்லிகை, கனகாம்பரம், செண்டுபூ, செவ்வந்திப்பூ, ஜாதிமல்லி, காக்கரட்டான், கோழிக்கொண்டை, மருகு, சம்மங்கி, ரோஜா, பட்டுரோஜா, முல்லை உட்பட பூக்களை பயிரிடுவது வழக்கம்.

தற்போது செவ்வந்தி பூவில் சாந்தினி பூ எனப்படும் ஒட்டுரக ஹைபிரிட் இனத்தைச் சேர்ந்த பூக்களை பயிரிட்டு வருகின்றனர். தற்போது அவை நன்கு வளர்ந்து செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. தினசரி பூக்கள் பறிக்கப்பட்டு பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுகுறித்து பூ விவசாயி ஒருவர் கூறுகையில், `மஞ்சள்நிற சாந்தினி பூக்கள் பூத்தாலும், செடியிலே ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை பூக்கள் மலர்ந்த படியே இருக்கும். அவசரப்பட்டு அறுவடை செய்ய தேவையில்லை. செவ்வந்தி பெயருடன் சாந்தினி பூ என்று அழைக்கப்படும் இந்த ஒட்டுரகப் பூ நல்ல மனத்துடன் இருப்பதால் பூ வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். பூ மார்க்கெட்டில் 1 கிலோ பூ ரூ.30க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

Related Stories:

>