அரசு அருங்காட்சியகத்தை விரிவுப்படுத்த பெருந்துறையில் 3 ஏக்கர் இடம் தேர்வு

*திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தீவிரம்

ஈரோடு : ஈரோட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு அருங்காட்சியகத்தை விரிவுப்படுத்தும் வகையில் பெருந்துறையில் 3 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வஉசி பூங்காவிற்கு அருகில் இயங்கிவரும் அரசு அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் 6வது அருங்காட்சியகமாக கடந்த 07-10-1987 அன்று தொடங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தின் வரலாற்றினையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் காட்சிப் பொருட்களான கற்சிற்பங்கள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகளும் உயிரியல் காட்சிப்பொருட்கள், ஓவியங்கள், மர சிற்பங்கள், புவியியல் காட்சிப்பொருட்கள், மானிடவியல் காட்சிப் பொருட்கள், ஓலைச்சுவடிகள், ஈரோடு மாவட்டத்தில் தன் வரலாற்றை விட்டுசென்ற முக்கிய நபர்கள் பற்றிய குறிப்புகள், ஈரோடு மாவட்டத்தின் புவிசார் குறியீடுகளை பெற்ற பெருமைக்குரிய பவானி ஜமுக்காளம், ஈரோடு மஞ்சள் உள்ளிட்டவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் முக்கிய கோயில்களும், வரலாற்று தலங்களுமான அறச்சலூர் இசைக்கல்வெட்டு, பவானி சங்கமேஸ்வரர் கோயில், விஜயமங்கலம் சமணர் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், மாநகரப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்தூரி அரங்கநாதர் கோயில்களின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம், பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, காலிங்கராயன் கால்வாய், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் ஆகியவற்றின் விவரத்துடன் கூடிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மனிதனின் கடந்த மற்றும் நிகழ்கால வாழ்க்கைக் கூறுகளை விளக்கும் மானிடவியல் சம்பந்தப்பட்ட கைராட்டை, தோற்பாவைகள், தானிய பானைகள், புதிய கற்கால கற்கருவிகள், கைபீரங்கி, பீரங்கி குண்டுகள், பெத்தாம்பாளையத்தில் கிடைத்த முதுமக்கள் தாழி, பி.மேட்டுப்பாளையம், கொடிவேரி ஆகிய இடங்களில் இருந்து கிடைத்த சுடுமண் பானைகள் ஆகியவை ஈரோடு மாவட்ட பெருங்கற்கால கலாச்சாரத்தை விளக்குகிறது.

அரசனுக்காக அல்லது மக்களுக்காக போருக்கு சென்று உயிர் துறந்தவர்கள், விலங்குகளிடம் சண்டையிட்டு வென்றவர்கள், ஆபத்திலிருந்து பெண்களை காப்பாற்றியவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையில் வீரக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சோழர் காலத்து கல்வெட்டுக்கள், 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட மன்னர்களின் கல்வெட்டுகள், விஜய நகர சிற்பங்கள் ஆகியவை ஈரோடு மாவட்டத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் வெளிகாட்டுவதாக உள்ளது.

கி.மு. 500 முதல் கி.மு 200 காலத்தை சார்ந்த பெருங்கற்கால காலத்தை சார்ந்ததாகவும், அடக்க களமாகவும், தொழிற்பட்டறையாகவும் இருந்துள்ள கொடுமணல் அகழாய்வு காட்சிப்பொருட்கள், ஈரோடு நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த கொடுமணல் பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டது.

அரசர் கால நாணயங்கள், நவீன ஓவியங்கள், ஓலைச்சுவடிகள், புவியியல் காட்சிக்கூடம், உயிரியல் காட்சிப்பொருட்கள் ஆகியவைகளும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஈரோடு அரசு அருங்காட்சியகத்தின் வாயிலாக, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொல்லியல் துறை மற்றும் வரலாற்றுத்துறை மாணவர்கள் பயிற்சிபெற்று பயனடைந்து வருகின்றனர்.

இவை தவிர தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் சின்னங்களை பெரும் வியப்புடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இப்படி பெரும் சிறப்புமிக்க ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், சேகரிக்கப்பட்ட இன்னும் பல்வேறு கல்வெட்டுகளும், சிற்பங்களும் வைக்க இடமின்றி நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு அரசு அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தி, இன்னும் பிற கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் காட்சிப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஈரோடு அடுத்த பெருந்துறையில் அரசு அருங்காட்சியகம் அமைக்க 3 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காப்பாட்சியர் குணசேகரன் தெரிவித்தார். இது குறித்து காப்பாட்சியர் குணசேகரன் கூறியதாவது:

அருங்காட்சியகம் மிகவும் குறுகியதாக உள்ளதால், விரிவுபடுத்த வேண்டும் அல்லது மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்திருந்தோம். அதன்பேரில், பெருந்துறை பகுதியில் 3 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து அருங்காட்சியகம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கூடிய விரைவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அனுமதி உத்தரவை தமிழ்நாடு அரசு வழங்கிய பிறகு, கட்டுமான பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: