சுருக்க முறை திருத்தம் குறித்து ஆலோசனை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் திருவண்ணாமலையில் மண்டல ஆய்வு கூட்டம்

*துணைத் தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்தது

*9 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தலைமையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இதில் 9 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த நவம்பர் 4ம் தேதி தொடங்கி, டிசம்பர் 14ம் தேதி வரை நடந்தது.அதையொட்டி, வாக்காளர்களிடம் சுய விபர படிவங்கள் வழங்கப்பட்டன. உரிய விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், கடந்த 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் அளிக்கவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக மனுக்கள் அளிக்கவும் அடுத்த மாதம் 18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தோர், இருமுறை பதிவு, அடையாளம் காண முடியாதோர் என மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதற்காக, சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணி தொடர்பாகவும், தற்போது நடந்து வரும் சுருக்க முறை திருத்தம் பணி ெதாடர்பாகவும் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானுபிரகாஷ் எத்துரு மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடந்தது. கூட்டத்தில், கலெக்டர்கள் தர்ப்பகராஜ் (திருவண்ணாமலை), சுப்புலட்சுமி (வேலூர்), சந்திரகலா (ராணிப்பேட்டை), சி.பி.ஆதித்யா செந்தில்குமார் (கடலூர்), ரெ.சதீஷ் (தருமபுரி), ச.தினேஷ்குமார் (கிருஷ்ணகிரி), ஷேக் அப்துல் ரஹ்மான் (விழுப்புரம்), எம்.எஸ்.பிரசாந்த் (கள்ளக்குறிச்சி), க.சிவசவுந்திரவள்ளி (திருப்பத்தூர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற சுருக்கமுறை திருத்தம் பணியை முழுமையாக நிறைவேற்றி இறுதி வாக்காளர் பட்டியல் திட்டமிட்டபடி வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: