செங்கத்தில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதிக்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளது

*அறநிலையத்துறை இணை ஆணையர் மீண்டும் உறுதி

செங்கம் : செங்கத்தில் 1600 ஆண்டுகள் பழமையான கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதிக்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளில் உள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் செய்யாற்றங்கரையோரம் 1,600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி முயற்சியால் தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதற்கிடையில் கோயிலில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 18 சித்தர்களில் ஒருவரான அகத்திய முனிவரின் ஜீவசமாதி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை மத்திய தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியதாக கடந்த 1ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்நிலையில் குடமுழுக்கு நடைபெறுவதற்கான பணிகளை நேற்று ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிரகாஷ் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இந்த கோயிலில் அகத்திய சித்தரின் ஜீவ சமாதி இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோயில் கருவறை, அம்மன் சன்னதி மற்றும் கோயில் கோபுரத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. சித்தர் ஜீவ சமாதி இருப்பது குறித்து விரைவில் தகவல் பலகையில் குறிப்புகள் எழுதி வைக்கப்படும்’ என்றார். அப்போது திருப்பணி குழு தலைவர் கஜேந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் மாதவன், அறங்காவலர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

பொன்னிறத்தில் ஜொலிக்கும் நந்தி சிலை

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 3ம் நாள் மாலையில், சூரிய ஒளி இக்கோயில் கோபுரத்தில் பட்டு, பின்னர் கருவறைக்கு எதிரே உள்ள நந்தி சிலை மீதும் நேரடியாக சூரிய ஒளி விழுகிறது.

அப்போது நந்தி பொன் நிறத்தில் ஜொலிக்கும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. இந்த நாளில் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது அகத்தியர் ஜீவ சமாதி உள்ள தகவலால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அனைத்து நாட்களிலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: