சருகணியாறு வடிநிலக்கோட்ட கால்வாய் 24 கிமீ தூரம் சீரமைப்பு பணி துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், அலவாக்கோட்டை ஊராட்சியில் சருகணியாறு வடிநிலக்கோட்டம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணிக்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து, தூர்வாரும் பணியை துவக்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, வரத்துக்கால்வாய் மற்றும் வடிகால் வாய்க்கால் பகுதிகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில், சருகணியாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் அலவாக்கோட்டை பெரியகண்மாய் கழுங்கு பகுதியிலிருந்து சருகணியாறு வடிநிலக்கோட்டத்தில் வரத்துக்கால்வாய் பகுதி துவங்குகிறது. அதிலிருந்து 24 கி.மீ சென்று, பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறது. இடைப்பட்ட 24 கி.மீ தூரத்திற்கான இந்த கால்வாயில் 4 அணைக்கட்டுக்கள் உட்பட 18 பாசன கண்மாய்கள் விவசாயிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இக்கால்வாயினை முழுமையாக சீரமைத்து மழைக்காலங்களில் பெறக்கூடிய நீர் முழுமையாக பாசன கண்மாய்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்பொழுது, மாவட்ட நிர்வாகம் மூலமாக வழங்கப்பட்ட ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இப்பணி துவக்கப்பட்டு வரத்துக்கால்வாய் முழுவதும் சீரமைக்கும் வகையில், தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படும். இதேபோல் மணிமுத்தாறு வரத்துக்கால்வாய் பகுதிகளும் மழைக்காலத்திற்கு முன்னதாக சீர் செய்யப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் சருகணியாறு செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், முத்துராமலிங்கம், அலவாக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் பிரகாசம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: