அறநிலைய துறைக்கு வாடகை பாக்கி 10 கடைகளுக்கு அதிரடி சீல்: 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அண்ணாநகர்: அறநிலைய துறைக்கு வாடகை பாக்கி செலுத்தாத 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முன்றதால் பரபரப்பு நிலவியது. நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு  சொந்தமாக 50க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குத்தகை அடிப்படையில் உள்ளவர்கள், கடந்த பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்துக்கு முறையாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. சம்மந்தப்பட்டவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், எந்த பதிலும் அளிக்கவில்லை, எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், அறநிலையத் துறை அதிகாரி வனிதா தலைமையில், மதுரவாயல் தாசில்தார், காவல்துறை உதவி கமிஷனர்கள் சகாதேவன், ரமேஷ்பாபு, அகஸ்டின் பால்சுதாகர் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து, வாடகை பாக்கி வைத்துள்ளவர்களை வெளியேறும்படி உத்தரவிட்டனர். இதனால், அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மீட்டனர். இதையடுத்து, வாடகை பாக்கி வைத்துள்ள 10 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும், வாடகை பாக்கி உள்ள அனைத்து கடைக்காரர்களும் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். இல்லையெனில், அவர்களின் கடைகளும் சீல் வைக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்து விட்டு சென்றனர்.

* வணிக வளாகத்துக்கு சீல்

திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தங்கும் விடுதி மற்றும் 12 கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகம் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் சம்மந்தப்பட்ட வணிக வளாக உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்தனர். ஆனால், எந்த பதிலும் அளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் பாபு, உதவி பொறியாளர்கள் மனோஜ், ராஜாராம் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, வணிக வளாகத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: