சூடு பிடிக்கும் தேர்தல் களம் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் திரண்ட உள்ளாட்சி வேட்பாளர்கள்: போலீஸ் தடியடி

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் விநியோகம் மற்றும் தாக்கல் ஆகியவை கடந்த 15ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 5ம் நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனு பெறவும், தாக்கல் செய்யவும் வேட்பாளர்களும், அவர்களுடன் வந்தவர்களால் திரண்டு வந்ததால் திருப்போரூர் ஒன்றிய அலுவலகம் முழுவதும் திணறியது.  நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாமக, விசிக, மக்கள் நீதி மையம், தேமுதிக. அமமுக, பாஜ வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வந்தனர். இதையொட்டி, ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் திருப்போரூர் ரவுண்டானா அருகே வேன், கார் ஆகிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் வந்தவர்களை நடந்து செல்ல அனுமதித்தனர்.

இதையடுத்து ஒன்றிய அலுவலக நுழைவாயிலில் வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் மட்டுமே உள்ளே சென்று மனு தாக்கல் செய்ய முடியும் என கட்டுப்பாடுகளை விதித்து மைக்கில் அறிவித்தபடி இருந்தனர். ஒரே நாளில் ஏராளமானோர் வந்ததால் ஓஎம்ஆர் சாலை, செங்கல்பட்டு சாலை, மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் சுமார் 2 கிமீ தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. ஒரு கட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாரை தப்பட்டை அடித்து, பட்டாசு வெடித்து கூட்டமாகவும், ஊர்வலமாகவும் சென்றவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணையன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்நிலையில், திருப்போரூர் ஒன்றிய அளவில் தண்டலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ரவிக்குமார், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராணி எல்லப்பன் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Stories: