கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆனைமலை: வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகேயுள்ள கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு அண்மையில் வனத்துறை சார்பில் கவியருவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

நேற்று வழக்கம்போல் அருவி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளித்து வந்த நிலையில், கவிஅருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்திஎஸ்டேட், கவர்கல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று மாலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். வெள்ளத்தில் பாறைகள், மரக்கிளைகள் அடித்து வரப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு கருதி அருவி நேற்று மூடப்பட்டது.

இன்று காலை 7 மணிக்கு அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டாலும், அருவியில் வெள்ளம் குறையாததால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

>