Swiggy, Zomato உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.- ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

டெல்லி: ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர இது சரியான நேரம் அல்ல என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 44 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதிக்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நேரடியாக நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5% வரி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட மாட்டாது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர இது சரியான நேரம் அல்ல. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ரூ.16 கோடி மதிப்பில் தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேன்சர் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 15%-லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. பயோ டீசலுக்கான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி போர்ட்டலில் தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்றுமதியாளர்கள் ஐடிசி( Input Tax Credit) வரியை திரும்பப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இ-வணிக நிறுவனங்களின் உணவு விநியோக சேவைக்கு ஜிஎஸ்டி  விதிக்கப்படும். ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்ககப்படும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: