திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு வாய்ப்பு: கண்ணையாவுக்கு சிறப்பு அழைப்பாளர் பதவி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆந்திர அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா சுப்பா ரெட்டி 2வது முறையாக சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஆனால், அறங்காவலர் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அறங்காவலர் குழுவுக்கு  ஆந்திர அரசு நேற்று முன்தினம் 28 பேரை நியமித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்த குமார், இந்தியா சிமென்ட் உரிமையாளர் என்.சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இது தவிர சிறப்பு, முதல் முறையாக அறங்காவலர் குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், தமிழகத்தில் இருந்து எஸ்ஆர்எம்யூ ரயில்வே சங்கத்தின் தலைவர் கண்ணையா, உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, ஜி.ஆர்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த 50 சிறப்பு அழைப்பாளர்களும், அறங்காவலர் குழு முடிவிலும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் தலையிட  முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: