உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும்: வைகோ பேட்டி

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்துதான், மதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியேற்றினார். பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் டிஆர்ஆர்.செங்குட்டுவன், கழகக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி, அண்ணாவின் கனவுகளை நனவாக்கும் ஆட்சியாகவும், கலைஞர் வழி வகுத்து தந்த பாதையிலே நடந்து, அண்ணா என்ன நினைத்தாரோ அதை நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக தற்போதைய ஆட்சி இருக்கின்றது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் இதுவரை 15 பேர் பலியாகியு ள்ளனர். அனிதா முதல் கனிமொழி வரையிலும் 15 இளம் தளிர்கள் மடிந்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் கல்வித்துறையை மாநிலப் பட்டியலில் இருந்து நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்கு கொண்டு போனது தான். இதனை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிச்சயமாக நீதி கிடைக்கும். மீண்டும் மாநிலம் இழந்த உரிமைகளை பெறுவோம் என்று நினைக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி அனைவரும் பாராட்டும் விதத்தில் உள்ளது. பழைய ஆளுநர் பொறுப்பேற்றவுடன் அதிகார எல்லைகளை மீறி, அவர் தனி ஆட்சி நடத்துவது போல தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். அதை எதிர்த்து திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது. நாங்களும் நடத்தினோம். புதிதாக வரும் ஆளுநர், முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்த தவறை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் தான் மதிமுக போட்டியிடும்.

Related Stories: