நிபா வைரசால் கேரள சிறுவன் பலி எதிரொலி நீலகிரியில் ரம்புட்டான் பழம் வாங்க மக்கள் அச்சம்: வியாபாரிகள் கவலை

குன்னூர்:  வவ்வால்கள் கடித்த ரம்புட்டான் பழத்தை உண்டு நிபா வைரஸ் தாக்கி கேரள சிறுவன் உயிரிழந்தார். இதன்எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும்  ரம்புட்டான் பழங்களை வாங்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைவதால் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் 4 நாட்களுக்கும் மேலாக காய்ச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பரிசோதனையில் சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று பாதித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுவனின் வீட்டை சுற்றிலும் 3 கி.மீ. தூரத்துக்குட்பட்ட பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள்,  சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோடு அரசு மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை சாப்பிட வேண்டாம் எனவும், ரம்புட்டான் உள்ளிட்ட எந்த பழமாக இருந்தாலும் பாதி கடித்த நிலையில் கீழே கிடந்தால் அந்தப் பகுதியில் வவ்வால்கள் உள்ளன என்பதற்கான குறியீடு  என்று கேரளா அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பர்லியாறு, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் ரம்புட்டான் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. நிபா வைரஸ் அச்சம் காரணமாக வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ரம்புட்டான் பழங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் ரம்புட்டான் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: