தடுப்பூசி போட்டுக் கொண்டது 2% கர்ப்பிணிகள் மட்டுமே! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் இரண்டு சதவீத கர்ப்பிணிகள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற அவசியத்தின் காரணமாக, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் தடுப்பூசி குறித்து அதிர்ச்சி தகவல்  வெளியாகி உள்ளது. அதன்படி, மாநிலத்தில் சுமார் இரண்டு சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவை பொருத்தமட்டில் சுமார் 20 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். இவர்களில், 40,700 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 1.5 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர்.

அவர்களில் 1,278 கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். பொது மக்களுடன் ஒப்பிட்டால் தடுப்பூசி போட்டுக் கொண்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‘தடுப்பூசி குறித்த தவறான கருத்துக்களால் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைக்கு ஏற்படும் பய உணர்வு காரணமாக குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி போட தயங்குகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி போடுவதை மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும். பல மாநிலங்கள் முழு கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா பின்னடைவை சந்தித்து வருகிறது’ என்றனர்.

Related Stories: