இறந்ததாக கருதப்பட்டவன் திடீர் உதயம் அல்கொய்தா தலைவன் புதிய வீடியோ வெளியீடு: ஆப்கான் குறித்து பேசவில்லை

பெய்ரூட்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தை தகர்த்து தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் பலியாயினர். உலகையே நடுங்க வைத்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, அமெரிக்க ராணுவம், பாகிஸ்தானில் அதிரடியாக புகுந்து, அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்று கடலில் வீசியது. ஒசாமாவுக்குப் பின் அல்கொய்தா தலைவனாக அய்மன் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றான். இதற்கிடையே, அல்கொய்தாவை மிஞ்சி ஐஎஸ் அமைப்பு கொடூர தீவிரவாத அமைப்பாக வளர்ச்சி கண்டது. அல்கொய்தா தலைவன் ஜவாஹிரி கடந்தாண்டு உடல் நலக் குறைவால் இறந்து விட்டதாக கருதப்பட்டது.

இந்நிலையில், இரட்டை கோபுரத்தின் 20ம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஜவாஹிரியின் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அவ்ன உயிருடன் இருப்பதாக அல்கொய்தா அறிவித்துள்ளது. ஒரு மணி நேரம் ஓடும் இந்த வீடியோவில் ஜவாஹிரி, ‘ஜெருசலேம் யூதர்கள் மயமாக்கப்பட மாட்டாது’ என்கிறான். கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் ரஷ்ய படைகள் மீதான தாக்குதலுக்காக அல்கொய்தா வீரர்களை அவன் பாராட்டுகிறான். ஆனால், சமீபத்தில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தியது குறித்து எந்த இடத்திலும் அவன் பேசவில்லை. இருந்த போதிலும், இந்த புதிய வீடியோ மூலம் ஜவாஹிரி உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

Related Stories: