வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை எலும்பு முறிவுக்கு அதிநவீன மைக்ரோ பிளேட்டிங் அறுவை சிகிச்சை: துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை

மணப்பாறை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் வரலாற்றிலேயே முதன் முறையாக உள்ளங்கை எலும்பு முறிவுக்கு அதிநவீன மைக்ரோ பிளேட்டிங் கொண்டு உள்ளங்கை எலும்புகளை இணைத்து, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்தவர் அஜய் (24). இவர் பைக்கில் சென்று விபத்துக்குள்ளாகி வலது கையில் உள்ளங்கை எலும்புகள் உடைந்து, விரல் தசை நாண்கள் அறுந்து, தன் சொந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, செய்தித்தாளில் வந்த செய்தியின் மூலமாக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் கை அறுவை சிகிச்சை செய்யப்படுவதை தெரிந்து கொண்டு தன் நண்பர்கள் உதவியுடன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று 10ம் தேதி மாலையில் வந்து சேர்ந்தார். அவரை பரிசோதித்து பார்த்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜான் விஸ்வநாத் அடுத்த நாளே (நேற்று) அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை அஜய்க்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்து உடைந்திருந்த இரண்டு உள்ளங்கை எலும்புகளை, அதிநவீன மைக்ரோ பிளேட்டிங் மற்றும் ஸ்குருஸ் மூலம் மினிமல் இன்வே ஸிவ் பிளேட் (MIPO) ஆஸ்டியோ சின்தஸிஸ் முறையில் இணைத்ததுடன், கையில் அறுந்துபோன தசை நான்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் இணைத்து சாதனை புரிந்துள்ளார். வழக்கமாக இது போன்ற எலும்பு முறிவுகளுக்கு கே வையர் ஃப்க்ஸேசன் தான் செய்வார்கள்.

ஆனால் அஜய்குமாருக்கு அதிநவீன மைக்ரோ பிளேட்டிங் மற்றும் மைக்ரோ ஸ்குரு மூலம் உள்ளங்கை சிறிய எலும்புகள் இணைக்கப்பட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது தமிழக அரசு மருத்துவமனைகளில் (மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனை உட்பட) முதன் முறையாக இந்த நவீன மைக்ரோ பிளேட்டிங் முறையில் உள்ளங்கை சிறிய எலும்புகள் இணைக்கப்பட்டது. சிறந்த சாதனை என்று மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறினார். நோயாளி அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவசர பிரிவில் நன்றாக உடல்நலம் தேறி வருகிறார்.

Related Stories: