சித்ரவதை, கொலை செய்வதற்காக 200 ஆப்கான் பெண் நீதிபதிகளை தேடும் தலிபான்கள்: ரிலீசான சிறை குற்றவாளிகளும் அடாவடி

காபூல்: சித்தரவதை மற்றும் கொலை செய்வதற்காக 200 பெண் நீதிபதிகளை தலிபான்கள் தேடி வருவதாக, பிரிட்டன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்களை கொன்றும், சித்தரவதை செய்தும் வருகின்றனர். அதேநேரம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்கிய 200-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் உயிர் பயத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பிரிட்டனின் ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி நிறுவனம், தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நங்கர்ஹார் மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது பெண் நீதிபதி தலைமறைவான இடத்தில் இருந்து அளித்த பேட்டியில், ‘எட்டு மாதங்களுக்கு முன்பு, மனைவியை சித்திரவதை செய்த குற்றத்திற்காக தலிபான் ஒருவனுக்கு தண்டனை விதித்தேன். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நேற்று அவன் என்னை சித்திரவதை செய்வதாக மிரட்டினான். என்னைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளான். நான் என் வீட்டை விட்டு வெளியேறும்போது, அவனால் நான் கொல்லப்படலாம். 200-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகளின் இதேபோன்று அச்சத்தில் தலைமறைவாக உள்ளனர். எங்களது வேலைகளும் பறிபோய்விட்டது. சொத்துக்களையும் இழந்துவிட்டோம்.

எங்கள் வாழ்க்கையும்,ந எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. தலிபான்கள் எங்களை பிடித்து கொல்வதற்கு முன், சர்வதேச சமூகம் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், லண்டனில் வசித்துவரும் ஆப்கான் முன்னாள் குடும்ப நீதிமன்ற நீதிபதி மர்ஜியா பாபாகர் கெயில், ‘பெண் நீதிபதிகள் தலிபான் மற்றும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளால் கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். என் சகோதரரை தலிபான்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இன்றைய நிலையில், பெண்கள் நீதிபதிகளுக்கு இரண்டு எதிரிகள் உள்ளனர். ஒருவர் தலிபான், மற்றவர் குற்றவாளி’ என்றார்.

Related Stories: