அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் முன்னேற்றம்..!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் முன்னேறினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 10வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார்.

பின்னர், தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரேட்டினியை திணறடித்தார். 3 மணி 30 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 5-7, 6-2, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை தோற்கடித்து, 12-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவை 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொள்கிறார். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 4-வது அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்ற ஜோகோவிச் முனைப்பு காட்டி வருகிறார். ஜோகோவிச் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: