தடியடியை கண்டித்து 3ம் நாள் முற்றுகை விவசாயிகள் சொல்வதற்காக தூக்கில் போட முடியுமா? அரியானா அமைச்சர் மிரட்டல் பேச்சு

சண்டிகர்: `விவசாயிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட தயார். விசாரணையில் விவசாயிகள் மீது தவறு இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைப்படும்,’ என்று அரியானா உள்துறை அமைச்சர் தெரிவித்தார். அரியானாவில் கடந்த மாதம் முதல்வர் மனோகர் லால் கட்டார் காரை வழிமறித்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, அவர்களின் மண்டையை உடைக்கும்படி உத்தரவிட்ட கர்னால் மாவட்ட கலெக்டர் ஆயுஷ் சின்காவை சஸ்பெண்ட் செய்யும்படி வலியுறுத்தி, கர்னால் கலெக்டர் அலுவலகத்தை நேற்று 3வது நாளாக முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடி இருப்பதால், மாநிலம் முழுவதும் போராட்டம் பரவும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால், அசம்பாவிதங்கள்  ஏற்படுவதை தடுக்க கர்னால் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று கூறுகையில், `தடியடி குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட அரசு தயாராக இருக்கிறது. ஆனால், இது கர்னால் மாவட்ட கலெக்டர் ஆயுஷ் சின்கா தொடர்பானதாக மட்டும் இல்லாமல், கர்னால் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய முழு போராட்டம் குறித்த விசாரணையாக இருக்கும். இதில், விவசாயத் தலைவர்கள் அல்லது விவசாயிகள் தவறு செய்திருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ ஒருவர் கூறுகிறார் என்பதற்காக ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்க முடியாது. குற்றத்தின் அடிப்படையில் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும்,’ என்றார்.

Related Stories: