சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்க செயல் திட்டம்: பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்

புதுடெல்லி: சர்வதேச அளவில் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் செயல் திட்டத்தை கொண்டு வர, பிரதமர் மோடி தலைமையில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 13வது பிரிக்ஸ் மாநாடு காணொலி மூலமாக நேற்று நடந்தது. இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரக்க அதிபர் சிரில் ராமபோசா, பிரேசில் அதிபர் ஜார் பொல்சானரோ ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் முழுமையான ஒத்துழைப்பை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பிரிக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளது. பணப்புழக்கம், வணிகச் செயல்பாடுகள், தொழில் பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த குரலாக இம்மாநாடு அமைந்துள்ளது.

பல்வேறு ஒப்பந்தங்களை சீராய்வு செய்யவும், பலப்படுத்தவும் பிரிக்ஸ் மாநாடு முதன் முறையாக கூட்டு முயற்சி மேற்கொண்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகள் பிரிக்ஸ் மாநாடு அதிக பயனுள்ளதாக அமையும். சர்வதேச தீவரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் செயல் திட்டங்களை மேற்கொள்ள இம்மாநாடு உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து, தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச செயல் திட்டத்தை கொண்டு வருவது என, இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியால் அண்டை நாடுகளுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.அடுத்தாண்டு நடக்கும் 14வது மாநாட்டை சீனாவில், அதன் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடத்துவது என்று மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: