சதம் அடித்திருக்காவிடில் தொடக்க வீரராக இது எனக்கு கடைசி வாய்ப்பாக இருந்திருக்கும்: ரோகித்சர்மா பேட்டி

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே 4வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்னுக்கும், இங்கிலாந்து 290 ரன் குவித்தும் ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 99 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2வது நாள் முடிவில் 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று ராகுல், ரோகித்சர்மா பொறுமையாக ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். ஸ்கோர் 83 ரன்னாக இருந்தபோது ராகுல் 46 ரன்னில் ஆண்டர்சனின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து ரோகித்சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். ரோகித்சர்மா 145 பந்திலும், புஜாரா, 103 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித்சர்மா 80 ரன்னில் இருந்தபோது டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் மொயீன் அலியின் பந்தில் சிக்சர் அடித்து தனது 8வது சதத்தை நிறைவு செய்தார். வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட்டில் இதுதான் அவருக்கு முதல் சதம். 80 ஓவர் முடிந்ததும் இங்கிலாந்து புது பந்தை எடுத்த நிலையில், ராபின்சன் வீசிய முதல் பந்திலேயே ரோகித் சர்மா 127 ரன்னில் (256 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் புஜாரா 61 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இருவரும் 2வது விக்கெட்டிற்கு 153 ரன் எடுத்தனர். 2வது இன்னிங்சில் இந்தியா 92 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் முன்னதாக முடித்துக் கொளளப்பட்டது. 7 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் இந்தியா 171 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி 22, ரவீந்திர ஜடேஜா 9 ரன்னில் உள்ளனர். இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித்சர்மா கூறியதாவது: டெஸ்ட்டில் தொடக்க வீரராக களம் இறங்க இதுதான் என் கடைசி வாய்ப்பு என மனதில் ஓடியது. என்னை மிடில் ஆர்டரில் களம் இறக்க அணி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் ரன் எடுக்கவேண்டிய நெருக்கடியில் மனரீதியாக அந்த சவாலை ஏற்க தயாராக இருந்தேன். இன்று நான் ரன் எடுக்கவில்லை என்றால் எதுவும் நடந்திருக்கும். சதம் அடிப்பது என்பது வெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ, எப்போதுமே ஒரு நல்ல உணர்வுதான். அதற்காகத்தான் அனைத்து பேட்ஸ்மேன்களும் முயற்சி செய்கிறார்கள், நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். இன்று செய்த அதே முயற்சியை நாளை காலையும் (4ம் நாள்) செய்யவேண்டும். முடிந்த வரை பேட்டிங் செய்ய வேண்டும். ஆட்டத்தை எங்களை நோக்கி கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன், என்றார்.

சேசிங் செய்ய பயப்படக்கூடாது

இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் பால் கோலிங்வுட் கூறுகையில், ரோகித்சர்மா சிறந்த தொழில்நுட்பத்துடன் விளையாடினார். அதிரடி வீரரான அவர் இந்தத் தொடரில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மிகவும் கவனமாக ஆடுகிறார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இதனால் இந்தியா எவ்வளவு ரன் குவித்தாலும் பயப்படக்கூடாது தைரியமாக சேசிங் செய்யவேண்டும், என்றார்.

Related Stories: