12 ஐகோர்ட்களுக்கு 68 நீதிபதிகள் பரிந்துரை தமிழக வக்கீல்கள் 4 பேருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி: ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு கொலிஜியம் குழு அனுப்பியது

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் 4 பேர் உட்பட 68 பேர் 12 உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக தேர்வு செய்து, அதற்கான பரிந்துரை பட்டியலை கொலிஜியம் குழு ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ குழுவின் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர்  1ம் தேதி நடைபெற்றது. அப்போது பல மாநில உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை பூர்த்தி செய்ய 112 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக, சென்னை, அலகாபாத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12 உயர் நீதிமன்றங்களில் 68 பேரை நீதிபதிகளை நியமிப்பதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மேற்கண்ட பட்டியலின்படி 24 பேர் தற்போது நீதிபதிகளாக பணியில் உள்ளனர். மேலும் 44 பேர் வழக்கறிஞர்களாக உள்ளனர்.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகிய நான்கு பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பல மாநிலங்களிலும் பணியாற்றிய வழக்கறிஞர்களும் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின பெண் நீதிபதி மார்லி வாங்குங்கை, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பார். கொலிஜியம் பரிந்துரைத்துள்ள 68 நீதிபதிகளில் 10 பேர் பெண்கள் ஆவர்.

கொலிஜியம் குழுவின் பரிந்துரை பட்டியல், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவை வழங்குவார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே நேரத்தில் 3 பெண்கள் 9 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். அடுத்த சில நாட்களில் மாநில உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகள் பரிந்துரை பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: