அறநிலையத்துறை கோயில்களில் திருமணம் செய்யும் மணமக்களில் மாற்றுத்திறனாளியாக ஒருவர் இருந்தால் கட்டணம் இல்லை: பேரவையில் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

* தைத்திருநாளில் ரூ.10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

* அன்னதான திட்டம், செப்டம்பர் 17ம் தேதி முதல் திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று கோயில்களிலும் வழங்கப்படும்.

* மணமக்களில்  ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும்  திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், கோயில் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.     

* திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுகுன்றம் ஆகிய ஐந்து மலைத் திருக்கோயில்களுக்கு ரோப்கார் குறித்து ஆய்வு.

* திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் முதலுதவி மருத்துவ மையம்.

* கோயில் நிலங்களை விழிப்புடன் பாதுகாத்து மீட்க, வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்கள் உருவாக்கப்படும்.  

* திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கோயில்  பணியாளர்களுக்கு நிர்வாகப் பயிற்சிமையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

* திருநீறு மற்றும்  குங்குமப் பிரசாதம் 8 கோயில்களில் தயாரித்து, பிற கோயில்களுக்கு வழங்கப்படும்.

* பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் உட்பட முதற்கட்டமாக 10 முக்கிய கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

* சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எழும்பூர் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், கோயிலின் வருவாயைப் பெருக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் கட்டப்படும்.

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள, 1,250 கோயில்களுக்கு

திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

* சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களைப் பேணிப்  பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் ரூ.5 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்.

Related Stories: