முல்லா பரதர் தலைமையில் இன்று பதவியேற்க ஏற்பாடுகள் ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி ஆரம்பம்: பஞ்சஷிரை கைப்பற்ற உச்சகட்ட போர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் துணை நிறுவனர் முல்லா பரதர் தலைமையில் புதிய ஆட்சி இன்று அமைக்கப்பட உள்ளது.  ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஜனநாயக அரசு தலிபான்களிடம் பணிந்தது. அஷ்ரப்  கனி நாட்டை விட்டு தப்பி ஒட, 20 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்தது. தலிபான்களுக்கு பயந்து ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாட்டை கைப்பற்றினாலும், அமெரிக்க படைகள் வெளியேறும் வரை புதிய ஆட்சி அமைக்காமல் தலிபான்கள் அமைதி காத்தனர்.இந்நிலையில், கடந்த 30ம் தேதி நள்ளிரவில் அமெரிக்காவின் கடைசி படை வெளியேறிய நிலையில், புதிய ஆட்சிக்கான பணிகளை தலிபான்கள் மும்முரமாக தொடங்கினர். தலிபான்களின் தலைமை மத தலைவராக ஹைபதுல்லா அகுன்சதா இருப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவர் கந்தகாரில் இருந்தபடி மத விவகாரங்களையும், ஆட்சி நிர்வாகத்தையும் மேற்பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தலிபான் அமைப்பின் துணை நிறுவனரான முல்லா பரதர் தலைமையில் தலிபான் துணை நிறுவனர்களில் ஒருவரான முல்லா ஓமரின் மகன் முல்லா முகமது யாகூப் மற்றும் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்சாய் ஆகிய 3 பேர் உயர் பதவி வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லா பரதர் தலைமையில் ஆட்சி நடக்கும். அவரது தலைமையில் 25 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இது தவிர 12 மத தலைவர்களும் ஆட்சியில் அங்கம் வகிப்பர். கடந்த 1996-2001 வரை தலிபான் ஆட்சி ஷரியத் சட்டத்தின்படி நடந்தது. அப்போது, பெண்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள் செய்யப்பட்டன. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளதால் இம்முறை அனைவரையும் உள்ளடக்கிய சுமூகமாக ஆட்சி நடக்கும் என தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். தலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமைவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என நேற்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, புதிய தலிபான் அரசு இன்று பதவியேற்க உள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் நேற்று தெரிவித்தார்.அதே சமயம், ஆப்கானில் பஞ்சஷிர் மாகாணம் மட்டும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் தற்போது இல்லை. அதை பிடிக்க ஏற்கனவே ஆயிரக்கணக் கான படை அனுப்பப்பட்டு கிளர்ச்சிப் படையுடன் உள்நாட்டு போர் நடக்கிறது. இப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சிப் படையின் முக்கிய 3 தலைவர்களை கொன்று விட்டதாக தலிபான் கூறி உள்ளது.

மேலும் 11 முகாம்கள் கைப்பற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிளர்ச்சிப்படையின் 3 முக்கிய தலைவர்கள் ஆப்கானை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், பஞ்சிஷிரில் இருந்த முன்னாள் துணை அதிபர் அப்துல் சாலே தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆட்சிப் பொறுப்பேற்பதற்குள் பஞ்சிஷிரும் தலிபான் கட்டுப்பாட்டில் வர வாய்ப்பு ள்ளது. தற்போது நாட்டில் நிலவும் கடுமையான பொருளா தார சிக்கலால் மக்கள் பல துயரங்களை சந்திக்கும் நிலையில் ஆப்கானில் தலிபான் ஆட்சி மலரப் போகிறது.

தலிபான்களை எதிர்த்துபெண்கள் போராட்டம்

தலிபான் ஆட்சி அமைய உள்ள நிலையில், காபூலில் அதிபர் மாளிகை முன்பாக பெண்கள் நேற்று திரண்டு புதிய ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், ‘நாங்கள் தலிபான்களுக்கு தலைகுனிய மாட்டோம், எங்கள் உரிமைக்காக குரல் கொடுங்கள், நாங்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளோம்’ என தைரியமாக முழக்கமிட்டனர். பெண்களுக்கு படிப்பு உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களையும் அவர்கள் விநியோகித்தனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் தலிபான்

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என தலிபான்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டிலிருந்து பல்டி அடித்து, காஷ்மீர் விவகாரம் குறித்து பேச எங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி தங்களின் சுயரூபத்தை காட்டி உள்ளனர். கத்தாரின் தோகாவில் உள்ள தலிபான் அரசியல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாகீன் அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்காக பேசுவதற்கு தலிபான்களுக்கு உரிமை இருக்கிறது. இஸ்லாமியராக இருப்பதால் காஷ்மீரிலோ, இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்காகவோ குரல் கொடுப்பதற்கு தலிபான்களுக்கு உரிமை உள்ளது” என குறிப்பிட்டார். அதே நேரத்தில் எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆயுதமேந்தி போராடும் கொள்கை எங்களுக்கு கிடையாது என்றும் ஷாகீன் தெரிவித்தார்.

பாக்., சீனா ஆதரவு

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை அங்கீகரிப்பதில் உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி என தலிபான்கள் கூறினாலும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை. தலிபான் அரசை அங்கீகரிக்க முடியாது என இங்கிலாந்து வெளிப்படையாக கூறி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், தலிபான்கள் ஆட்சியை பார்த்த பின் முடிவெடுப்பதாக கூறி உள்ளன. இப்போதைக்கு சீனா, பாகிஸ்தான் மட்டுமே தலிபான் ஆட்சிக்கு ஆதரவு தருகின்றன. சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி என தலிபான்களே கூறி உள்ளனர். ஆப்கான் மக்களுக்காக உலக நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு தர வேண்டும் என பாகிஸ்தான் ஐநா கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: