அதிமுக பிரமுகர் விதிமீறி மண், பாறை அகற்றம் குன்னூர் ஜி.ஹெச். தடுப்புச்சுவர் இடிந்தது

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இவற்றை மீறி குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் கடந்த ஒரு மாதமாக அதிமுக மாஜி கவுன்சிலர் யோகேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திடீரென அருகில் உள்ள அரசு மருத்துவமனை தடுப்புச்சுவரின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது.  

இதனால் மருத்துவமனை கட்டிடம் அந்தரத்தில் தொங்குகிறது. எக்ஸ்ரே ஆய்வு மையத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் விழுந்ததால் மருத்துவமனைக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்த சப் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி நேரில் ஆய்வு செய்து பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். விசாரணையில், தடுப்புச்சுவர் கட்டுவதாக அனுமதி பெற்று விதிமீறி மண் அகற்றியது தெரியவந்தது.  

இதையடுத்து அதிமுக மாஜி கவுன்சிலர் யோகேஷுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் முதற்கட்டமாக மண் மூட்டை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்க சப் கலெக்டர் உத்தரவிட்டார். ஒன்றிய மண் வள பாதுகாப்பு அதிகாரி மணிவண்ணன் ஆய்வு நடத்தி விதிமீறி மண் அகற்றியதை உறுதி செய்தார். மழை பெய்தால் மருத்துவமனை கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் புதிதாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Related Stories: