ஒன்றிய அரசுக்கு எதிராக 20-30 வரை நடக்கும் போராட்டங்களை வழி நடத்த 9 பேர் கொண்ட வியூகக் குழு: சோனியா காந்தி அதிரடி

புதுடெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் 19 எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்த உள்ள போராட்டங்களை திட்டமிடவும், அவற்றை வழி நடத்தவும் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் 9 பேர் கொண்ட வியூகக்குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள், பொது சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.6 லட்சம் திரட்டுதல், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த மாதம் நடந்த 19 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் ஒன்றிய அரசை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த போராட்டங்களை திட்டமிடவும், வழி நடத்தவும் 9 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தேசிய பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களை நடத்துவதற்காக மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் வியூகக் குழு அமைக்கப்படுகிறது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மக்களவை எம்பி. உத்தம் குமார் ரெட்டி, மாநிலங்களவை எம்பி ரிபுன் போரா, மணிஷ் சத்ரதா பிகே. ஹரி பிராசத், உதித் ராஜ், ராகினி நாயக், ஜூபேர் கான் உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்,’ என கூறியுள்ளார்.

Related Stories: