புரோ கபடி சீசன் 8 தமிழக வீரர் ரஞ்சித் 80 லட்சத்துக்கு ஏலம்: பிரபஞ்சன் 71 லட்சத்துக்கு ஏலம்

மும்பை: புரோ கபடி 8 வது சீசனுக்கான ஏலத்தில்  தமிழக வீரர்கள் சந்திரன் ரஞ்சித் 80 லட்ச ரூபாய்க்கும், பிரபஞ்சன் 71 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்து உள்ளனர். புரோ கபடி 8வது சீசன் கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு டிசம்பரில் 8வது சீசனை நடத்த புரோ கபடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே புதிய சீசனுக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் 3 நாட்கள் நடந்தன. நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஏலத்தில் 12 அணிகளும் தலா 4.4  கோடி ரூபாய் வரை செலவிட அனுமதிக்கப்பட்டு இருந்தன.  

ஏலத்திற்கு பங்கேற்க சுமார் 300 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு, அடிப்படை ஏலத்தொகை 30, 20, 10, 6 லட்ச ரூபாய்களாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. அப்படி அடிப்படை விலையாக 30லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்த பாட்னா அணியின் முன்னாள் கேப்டன் பிரதீப் நர்வால் அதிகபட்சமாக 1.65 கோடி ரூபாய்க்கு யுபி யோதா அணி ஏலத்தில் எடுத்தது. அடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் முன்னாள் வீரர் சித்தார்த் தேசாயை அதே அணி மீண்டும் 1.30 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. கடந்த ஆண்டு அதிக தொகைக்கு ஏலத்தில்(1.45கோடி) போன வீரர் என்ற பெருமையும் சித்தார்த்துக்கு உரியது. மற்றவர்கள் யாரும் ஒரு கோடியை தாண்டவில்லை.

தமிழக வீரர்களில் முன்னாள் டெல்லி வீரரான சந்திரன் ரஞ்சித்தை 80லட்ச ரூபாய்க்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

மற்றொரு தமிழக வீரரும், பெங்கால் அணியின் முன்னாள் வீரருமான பிரபஞ்சனை 71லட்ச ரூபாய்க்கு தமிழ் தலைவாஸ் வாங்கியுள்ளது. தடுப்பு ஆட்டக்காரர்களில் ஜீவா குமார் 44 லட்சத்துக்கும் டெல்லி அணியும், தர்மராஜ் சேரலாதன் 20 லட்சத்துக்கு ஜெய்பூர் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. இப்படி மொத்தம் 190 வீரர்களை 12 அணிகளும் 48.22கோடி ரூபாய் செலவிட்டு ஏலத்தில் எடுத்துள்ளன. முன்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்  அஜய்  தாகூர், ராகுல் சவுத்ரி, ராகேஷ் குமார், மோனு கோயத், ரிஷாங் தேவடிகா ஆகியோர் 50லட்சத்தை தாண்டவில்லை.

அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்கள்

வீரர்கள்    வாங்கிய அணி    ஏலத்தொகை

(லட்சங்களில்)

சந்திரன் ரஞ்சித்    பெங்களூர் புல்ஸ்    80

கே.பிரபஞ்சன்    தமிழ் தலைவாஸ்    71

ஜீவாகுமார்    தபாங் டெல்லி    44

வி.அஜீத்குமார்    யு மும்பா    25

தர்மராஜ் சேரலாதன்    ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ்    20

விஜின் தங்கதுரை    பெங்கால் வாரியர்ஸ்    10

சி.அருண்    தெலுங்கு டைட்டன்ஸ்    10

சாந்தப்பன செல்வம்    தமிழ் தலைவாஸ்    10

அபினேஷ் நடராஜ்    புனேரி பல்டன்    6

Related Stories: