கூடுவாஞ்சேரி - கொட்டமேடு சாலையில் கால்வாய் இல்லாமல் சாலை அமைத்ததால் குளம்போல் தேங்கும் மழைநீர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் அவதி

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி - கொட்டமேடு சாலையில் கால்வாய் அமைக்காமல், கடந்த ஆட்சியில் சாலை அமைத்ததால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில் இணையும் 18 கிமீ கொண்ட கூடுவாஞ்சேரி - கொட்டமேடு சாலையில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இச்சாலையை பயன்படுத்தி பள்ளி, கல்லூரி செல்பவர்களும், அன்றாடம் வேலை மற்றும் வெளியூர்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் அனைவரும் கூடுவாஞ்சேரி வந்து, அங்கிருந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிக்கு செல்கின்றனர்.

பெருகி வரும் மக்கள் தொகையாலும், வாகனங்களாலும் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுது. இதையடுத்து, 4 வழி சாலையான கூடுவாஞ்சேரி - கொட்டமேடு சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற, கடந்த ஆட்சியின்போது, தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி, பல கோடி நிதி ஒதுக்கியது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணியை  நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கினர். ஆனால், சில பகுதிகளில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை அமைத்தனர். பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், கால்வாய்களை அமைக்காமல் விட்டுவிட்டனர்.

இதுபற்றி, கடந்த ஆட்சியில் இருந்த அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என பலரிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் காயரம்பேடு, மூலக்கழனி, விஷ்ணுபிரியா நகர், பெருமாட்டுநல்லூர் கூட்ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களில், பரவலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதில், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால், நடந்து செல்லும் மக்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்கிறது. இதையொட்டி, அவர்களுக்குள் வாக்குவாதமும், அடிதடி தகராறும் ஏற்படுகிறது.

பொதுமக்கள், சாலையில் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்டும் காணாமல் உள்ளனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், மேற்கண்ட பகுதிகளில் முறையாக கால்வாய் அமைத்து, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: