ஆஸி., உலக கோப்பை தொடர்களில் இந்திய மகளிர் அணி சாதிக்கும்: மிதாலிராஜ், ரமேஷ் பவார் கூட்டாக பேட்டி

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வருகிற செப்.1ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு பகல்-இரவு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின்னர் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் நியூசிலாந்தில் 50 ஓவர்கள் கொண்ட  சர்வதேச உலகக் கோப்பை போட்டி நடக்கிறது.

இதுகுறித்து கேப்டன் மிதாலிராஜ், கோச் ரமேஷ் பவார் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு என நாங்கள் தனித்தனியாக தயார் செய்வதில்லை. அனைத்து வகையான போட்டிகளுக்கும் ஒரே பயிற்சி தான்.

இந்திய வீராங்கனைகள் அனைத்து வகையான போட்டிகளை விளையாடவும் உடற்தகுதியும், மனவலிமையும் பெற்றுள்ளனர். நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. அதற்கு முன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இருப்பதால் எங்களுக்கு இது நல்ல பயிற்சியாக அமையும் என எதிர்பார்க்கிறோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வீராங்கனைகள் விளையாடுவதை வைத்து உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

நமது அணியின் வேகப்பந்து வீச்சு திறனை அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் ஸ்டார் வேகப்பந்து வீச்சாளரான ஜூலான் கோஸ்வாமியின் சுமையைக் குறைக்க முடியும். இதற்காக மேக்னாசிங், பூஜா  ஆகியோரை தயார்படுத்தி வருகிறோம். பகல் இரவு டெஸ்ட்டில் பயன்படுத்தப்படும் ‘பிங்க்’ பந்து உண்மையிலேயே அணிக்கு சவாலாகும். இதற்காக பெங்களூரில் போதிய பயிற்சிகளை எடுத்துள்ளோம். ஆஸ்திரேலியாவிலும், நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியிலும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சாதனை படைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: