யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா-வெரா ஸ்வோனரேவா மோதல்

நியூயார்க்:கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான யு.எஸ்.ஓபன் போட்டிகள் வரும் 30ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை நியூயார்க்கில் நடைபெற உள்ளன. முதல் சுற்றுப் போட்டியில் யார், யாருடன் மோதவுள்ளார்கள் என்பது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். நேற்று நடந்த இத்தேர்வின் அடிப்படையில் போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், தனது முதல் போட்டியில், தகுதி சுற்றில் தேர்வாகி வரும் இளம் வீரருடன் மோதவுள்ளார். இளம் வீரர்களுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

இருப்பினும் ஜோகோவிச், அடுத்தடுத்த போட்டிகளில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் போன்ற முன்னணி வீரர்களை பைனலுக்கு முன்பாகவே எதிர்கொண்டு மோதவுள்ளார். இந்த காலண்டர் வருடத்தில் ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் என இதுவரை நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அனைத்திலும் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று, சாதனை படைத்துள்ள ஜோகோவிச், யு.எஸ்.ஓபன் பட்டத்தையும் குறி வைத்து, கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்ச் ஓபனில் ரன்னர் கோப்பையை கைப்பற்றிய கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாஸ், யு.எஸ். ஓபன் முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயுடன் மோதவுள்ளார். ஆடவர் ஒற்றையரில் இதுவரை முர்ரே, யு.எஸ்.ஓபன் உட்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இருப்பினும் இடுப்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பியுள்ள முர்ரே, தரவரிசையில் தற்போது 117ம் இடத்தில் உள்ளார். ஏடிபி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், தனது முதல் சுற்றுப்போட்டியில் பிரான்சின் அனுபவம் வாய்ந்த ரிச்சர்ட் காஸ்கட்டுடன் மோதவுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் டபிள்யூடிஏ தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஸி. வீராங்கனை ஆஷ்லீ பார்டி, தனது முதல் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வோனரேவாவுடன் மோதுகிறார், நடப்பு யு.எஸ்.ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகா, தனது முதல் சுற்றுப் போட்டியில் செக்.குடியரசின் இளம் வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை எதிர்கொண்டு மோதவுள்ளார்.

Related Stories: