உலக யு20 தடகள போட்டியில் வெற்றி; தாயின் `தங்கத்தால்’ வெண்கலம் வென்றேன்: வறுமையிலும் சாதித்த விழுப்புரம் பாரத் ஸ்ரீதரன் நெகிழ்ச்சி

விழுப்புரம்: கென்யா தலைநகர், நைரோபியில் நடந்த 20 வயதுக்குட்பட்ட உலக இளையோர் தடகள போட்டியில் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், 10 ஆயிரம் மீட்டர் ஆடவர் நடை பந்தயத்தில் வீரர் அமித்கத்ரி வெள்ளி பதக்கமும், மகளிர் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலிசிங் வெள்ளி பதக்கமும் என மொத்தம் 3 பதக்கங்களை வென்று இந்தியா 21வது இடம் பிடித்தது. இந்த போட்டியில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள ஓட்ட வீரர் பாரத் ஸ்ரீதரன் கூறியதாவது:

விழுப்புரத்தில் உள்ள மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளியில் தான் படித்தேன். இந்த பள்ளியில் சேர்க்க லாரி டிரைவரான என் தந்தையும், என் அம்மாவும் தங்களது சேமிப்பு முழுவதையும் காலி செய்தனர். அங்கு நான் 6வது படிக்கும்போது மாவட்ட விளையாட்டு அதிகாரியாக இருந்தவர் தான், எனக்குள் இருந்த ஓட்டத் திறமையை வெளிக் கொண்டு வந்து இன்று நான் உலக அளவில் பதக்கம் பெற காரணமாக இருந்தவர். அவர் மாற்றப்பட்ட பிறகு என்னை ஊக்கப்படுத்த யாரும் இல்லை.

இதனால் 2 ஆண்டுகளாக ஓட்டத்தை கைவிட்டேன். பின்னர் என் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரின் உந்துதலால் மீண்டும் ஓடினேன். பின்னர் மாநில அளவில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து 2 ஆண்டுகள் தங்க பதக்கம் வென்றேன். அத்ெலடிக் பயிற்சி பெற என்னுடைய குடும்பத்திற்கு வசதி இல்லை. அடிக்கடி ஓட்டப் பயிற்சி செலவுகளுக்காக தாயின் நகைகள் அடகு கடைகளுக்கு சென்றன. ஒரு ஷூ வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல், போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் செல்ல டிக்கெட் எடுக்க பணமில்லாமல் தவித்தபோது என் பெற்றோர் தான் தங்கத்தை அடகு வைத்து எனக்கு ஆதரவளித்தனர். இதற்காக அவர்கள் வீட்டின் பல செலவுகளை சுருக்கிக் கொண்டனர்.

நைரோபியில் வெண்கலம் வென்றதும் உடனே என் தாய், தந்தைக்கு போன் செய்து கண்ணீருடன் பகிர்ந்துகொண்டேன். இந்த அதலெடிக் என்னுடைய குடும்பத்தை எதிர்காலத்தில் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலில் என்னுடைய தந்தைக்கு புதிய லாரி வாங்கிக் கொடுக்க வேண்டும். உலக போட்டியில் நான் பதக்கம் வெல்ல காரணமானவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: