தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமையுமா? பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி : நெல்லை மாவட்டத்தில் இருந்து 1986ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், தனி மாவட்டமாக உருவானது. மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடியில் நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களில் ஒன்றான வஉசி துறைமுகம் இடம்பெற்றுள்ளதால் தொழில் நகராமாக திகழ்ந்து வருகிறது. தென்னகத்தின் நுழைவுவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.

துறைமுகம் தவிர அரசு மற்றும் தனியார் அனல்மின் நிலையங்கள், உரத்தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், கடல்சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், ஸ்பிக், டாக், மத்திய அரசின் கனநீர் ஆலை, உப்பு உற்பத்தி ஆலைகள் மற்றும் பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற போக்குவரத்து வசதிகளும் உள்ளது.

இதனால் நகரம் நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் மாநகராட்சியாக உருவானது. மாநகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 4.25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். கல்வி அறிவில் மாநிலத்தில் முதல் 5 இடங்களில் தூத்துக்குடி இடம்பெற்றுள்ளது.

இங்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளது. அரசு மருத்துவக்கல்லுரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது. இங்கு 4 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கலைக்கல்லூரிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதி என்பதாலும், அதிகம் படித்தவர்கள் உள்ள நகரமாக இருப்பதாலும் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் தவித்து வருகின்றனர்.

மேலும் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவியர் கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமல் படிப்பை நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. மாவட்டம் உருவாகி 35 ஆண்டுகள் ஆகியும் தலைநகரமான தூத்துக்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவடையாமல் இருந்து வருகிறது. இந்த ஆண்டாவது தூத்துக்குடியில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: