35 புதிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்கப்படும் 2,098 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை: 2,098 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் 35 புதிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சட்டப்பேரவையில்  பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் போட்டித்  தேர்வுகள் வாயிலாக தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்னுரிமை அளிக்கிறது.

ஏற்கனவே காலியாக உள்ள  பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு 367 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும் 723 நிலை-1 முதுநிலை கணினி பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு பாடங்களில் 492 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு வாயிலாக 2020-21ம் கல்வி ஆண்டில் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 2,098  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். 2020-21ம்  கல்வியாண்டில் 35 புதிய மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்கவும், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் 44 மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: