ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக விவகாரம் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படவில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்; அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி துறை மற்றும் பள்ளி கல்வி துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அதிமுக) பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் உள்ள உயர் கல்வி மன்ற வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு தினமும் மாலை அணிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு மாதமாக மாலை அணிவிக்கப்படவில்லை. விழுப்புரத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் அதிகமாக வருகின்ற காரணத்தினால், அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஜெயலலிதா பெயரில் ஒரு பல்கலைக்கழகம் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆட்சி முடியும் நேரத்தில்தான் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அந்த பல்கலைக்கழகம் அங்கு தொடர்ந்து செயல்பட வேண்டும்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: 100 ஆண்டு காலம் புகழ்மிக்க அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இந்த மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகளை இணைப்பதன் மூலமாக பெருமை சேர்ப்பதற்காக எடுத்த முடிவே தவிர, அந்த பல்கலைக்கழகம் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தால் அம்மா உணவகம் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்க முடியும். பெயர் ஏன் நீக்கப்பட்டது என்று அமைச்சர் இங்கே விளக்கமாக கூறிவிட்டார். காழ்ப்புணர்ச்சியோடு இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார். ஆனால், அமைச்சர் பொன்முடி, அந்த பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்போம் என்கிறார். எனவே, இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

* சட்ட பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து பொதுப்பணி அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசுவார்.

Related Stories: