வேலூர் மாநகராட்சியுடன் இணைந்து வீடுதோறும் தடுப்பூசி சென்று சேர தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற வேண்டும்-விழிப்புணர்வு பேரணியை தொடங்கி கலெக்டர் பேச்சு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் வீடுதோறும் கொரோனா தடுப்பூசி சென்று சேரும் வகையில் அரசு, மாநகராட்சியுடன் இணைந்து ரோட்டரி சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கேட்டுக்கொண்டார்.வேலூர் மாநகராட்சி, ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு வாகன பேரணி மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து நேற்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் நிர்மல்ராகவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளவர்களை உள்ளடக்கி 50 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முன்களப்பணியாளர்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வீடுதோறும் கொரோனா தடுப்பூசி சென்று சேர தொண்டு நிறுவனங்கள் அரசு மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், ரோட்டரி சங்க மாவட்ட ஆலோசகர் சம்பத்குமார், முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜவரிலால்ஜெயின், ரோட்டரி மாவட்டம் போலியோ பிளஸ் தலைவர் கஜேந்திரன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் பாண்டியன், ஜே.கே.என்.பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் 50க்கும் மேற்பட்ட கார்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் இன்பென்டரி சாலை, அண்ணா சாலை தெற்கு காவல் நிலையம், ஆரணி சாலை வழியாக பாகாயம் சென்று மீண்டும் மாநகராட்சி அருகில் வந்து நிறைவடைந்தது.

Related Stories: