தமிழக சட்டமன்றத்தில் 50 ஆண்டு காலமாக மக்கள் பணியாற்றி வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி தீர்மானம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்

* அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்கள் புகழாரம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், 50 ஆண்டு காலமாக மக்கள் பணியாற்றி வரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு, அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நீர்வளத்துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடியவர் திமுகவினுடைய பொதுச்செயலாளராகவும், இந்த அவையினுடைய முன்னவராகவும் இருக்கும், துரைமுருகன், துறையின் மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதற்காக என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்

கொள்கிறேன்.  

தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டுமென்று சொன்னால், தலைவர் கலைஞரும், பேராசிரியரும் மறைந்த பிறகு, ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு, எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருக்கக் கூடியவர்தான் துரைமுருகன். நான், துரைமுருகனை கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன். எதுவாக இருந்தாலும் மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி, கட்சிக்கும், ஆட்சிக்கும் துணையாக இருக்கக்கூடியவர்.

கலைஞர் எப்போதுமே துரைமுருகனை, ‘துரை, துரை’ என்றுதான் பாசமாக அழைப்பார். அவரோடு இனிமையாக பேசுவார், பழகுவார். கலைஞர் பக்கத்திலே அல்ல; அவருடைய இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்திருந்தவர்தான் அண்ணன் துரைமுருகன். 1971ம் ஆண்டு காட்பாடி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், அதே தொகுதியில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ராணிப்பேட்டை தொகுதியிலே 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வென்று இந்த அவைக்கு வந்து தன்னுடைய ஆழமான கருத்துக்களை பதிவு செய்து, சட்டமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருக்கிறார். அதற்காக அவரை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றத்திலே 50 ஆண்டுகள் பங்கெடுத்து, பொன்விழா நாயகராக அமைச்சர் துரைமுருகன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எப்பொழுது பார்த்தாலும், அவர் பொன் போன்று பளபளவென்று சட்டைபோட்டுக் கொண்டு வருவார். புன்னகையும் அவரிடத்திலே எப்பொழுதும் இருக்கும். அத்தகைய சட்டமன்ற பொன்விழா நாயகருக்கு பாராட்டு தெரிவிக்கின்ற வகையிலே, இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். இதனை நீங்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

‘தமிழ்நாடு சட்டமன்றத்திலே, 1971 முதல் தற்பொழுது வரை, 10 முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கிறார், பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.  அவையின் மாண்பை காப்பதிலே ஒரு நல்ல வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகனை இந்த பேரவை மனதார பாராட்டுகிறது’ என்னும் இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். நன்றி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை வழிமொழிந்த அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:

பூவை.ஜெகன்மூர்த்தி(புரட்சி பாரதம்): பொன்விழா கண்டிருக்கிற அமைச்சருக்கு  கே.வி.குப்பம் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிளேன்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): இந்த சட்டப்பேரவையில் 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக, எதிர்க்கட்சி துணை தலைவராக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.

ஈஸ்வரன் (கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி): அதிகாரிகளிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமோ அப்படி வேலைவாங்கும் திறமை கொண்டவர். கலைஞருடன் மட்டுமல்ல எம்ஜிஆருடனும் நட்புடன் இருந்துள்ளார்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): வரலாறுமிக்க இந்த சட்டமன்றத்தில் துரைமுருகன், அரை நூற்றாண்டு கண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): 100 ஆண்டுகளுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழவேண்டும்.

ராமச்சந்திரன் (இ.கம்யூ): 50 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றி பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட்): நகைச்சுவை உணர்வோடு பேசும்போது பொருள்பட பேசுவதில் திறமையானவர்.

சிந்தனைசெல்வன் (விசி):  கேவி.குப்பத்தில் பிறந்து கோட்டையில் சிறந்த ஒரு அமைச்சராக இருக்கிறார்.

நயினார் நாகேந்திரன் (பாஜக): மனிதனுக்கு சுவாசம் நின்று போகலாம். விசுவாசம் நின்று போகக்கூடாது. கலைஞருடன் இருந்த விசுவாசம் நின்று போகாமல் முதல்வருடனும் (மு.க.ஸ்டாலின்) தொடர்கிறது.

ஜி.கே.மணி (பாமக): பாமக நிறுவனர் மீது பற்றும் பாசமும் கொண்டவர். அவர் சார்பில், அமைச்சர் துரைமுருகனை பாராட்டுகிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்): 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காவிரில் 420 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று உறுதிப்படுத்தியதற்கு காரணமாக இருந்தவர் துரைமுருகன்.

ஓ.பன்னீர்செல்வம் (எதிர்க்கட்சி துணைத் தலைவர்): முதல்வர் உட்பட அனைவருக்கும் சந்தோஷமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். ஒரு அரசியல்வாதி என்றால் ஒரு இலக்கு இருக்கும். உள்ளாட்சி தலைவராகி, எம்எல்ஏ-ஆக வேண்டும் என்று. ஆனால் இவர் ஒருமுறை இருமுறை அல்ல 10 முறை எம்எல்ஏ-அக தேர்வாகி உள்ளார். 2001ல் இருந்து அவரது சட்டமன்ற நடவடிக்கையை நான் கூர்ந்து பார்த்து வருகிறேன். அனைவரிடமும் பாசம் காட்டுபவர். அவர் பேசுவதிலும், சிரிக்க வைப்பதிலும், அழ வைப்பதிலும், சிந்திக்க வைப்பதிலும் சிறந்தவர் என்று முதல்வர் கூறினார். அவரிடமிருந்து நிறைய பாடங்களை நான் கற்றுள்ளேன். அவருக்கு அதிமுகவின் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழவேண்டும்.

சபாநாயகர் அப்பாவு: திமுகவில் சிறப்பாக பணியாற்றியவர். எம்ஜிஆர், கலைஞர் ஒன்றாக இருந்தபோதும் அவர்களிடம் சிறப்பாக பணியாற்றினார். அவர்கள் பிரிந்தபோது எனக்கு தலைவர் கலைஞர்தான் என்று திமுகவில் தொடர்ந்து செயல்பட்டார். நமது முதல்வருக்கு சாணக்கியனாக இருந்து செயல்பட்டு வருகிறார். அவர் பல 100 ஆண்டுகள் வாழவேண்டும். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Related Stories: