இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை ஆப்கன் சம்பவம் விளக்‍குகிறது!: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்வீட்

டெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் ஏன் வேண்டும் என்பதை ஆப்கானிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள் விளக்‍குவதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை கைப்பற்றிய நிலையில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. அங்குள்ள இந்தியர்களை ஒன்றிய அரசு தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை ஆப்கன் சம்பவம் விளக்‍குகிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் கடினமான கால கட்டத்தில் உள்ளதாகவும், இதற்காகத்தான் குடியுரிமை திருத்த சட்டம் அவசியமாவதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் துன்புறுத்தப்பட்டு 2014ம் ஆண்டு டிசம்பருக்கு முன் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்த சட்டம் வழிவகை செய்கிறது. அதேநேரம், இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் இந்த பட்டியலில் சேர்க்‍கப்படாதது குறிப்பிடத்தக்‍கது.

Related Stories: