26ம் தேதி முதல் 4 நாட்கள் குவாட் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி

புதுடெல்லி:  பிலிப்பைன்ஸ் கடலில் வரும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 4 நாடுகளின் கடற்படைகள் 4 நாட்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து ‘குவாட்’ கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. சீனாவின் ராணுவ ஆதிக்கத்துக்கு எதிராக இவை இணைந்துள்ளன. இந்த நான்கு நாடுகளும் இணைந்து ஆண்டு தோறும் நடத்தி வரும் கூட்டு கடற்படை பயிற்சியான, ‘மலபார் பயிற்சி’ வரும் 26ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிலிப்பைன்ஸ் கடலின் குவாம் கடற்கரை பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான பீரங்கி தாங்கி போர்கப்பலான ஐஎன்எஸ் ஷிவாலிக், நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் காத்மாட் ஆகியவை நேற்று முன்தினம் குவாம் கடற்கரையை சென்றடைந்தன. மலபார் பயிற்சியின்போது, போர்க் கப்பல்களை தாக்கி அழித்தல், நீர்மூழ்கி கப்பல்கள், நீண்ட தூர கடல் ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை அதிவேக பயிற்சிகள் செய்து பார்க்கப்படும். குவாட் அமைப்பில் இணைந்துள்ள ஆஸ்திரேலியா கடந்த ஆண்டுதான் முதல் முறையாக மலபார் பயிற்சியில் இணைந்தது.

Related Stories: