அரக்கோணம் நகராட்சிக்கு வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முயற்சி: வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு

அரக்கோணம்:  அரக்கோணம் நகராட்சிக்கு வரி மற்றும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முயன்றதால், வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அரக்கோணம் நகராட்சிக்கு பல்வேறு வகையான வரி இனங்கள் மற்றும் கடை வாடகை மூலமாக சுமார் 17 கோடி வசூலாக வேண்டி உள்ளது. இதனால், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆசீர்வாதம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தீவிர வரி மற்றும் வாடகை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இதுவரை, சுமார் 10 லட்சத்திற்கு மேல் வரி மற்றும் வாடகை பாக்கி  வசூலாகியுள்ளது. இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கொரோனா காலத்தில் மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், பொருளாதாரம் இன்றி வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால், சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை, அதிகாரிகள் ஏற்காமல் இதுபோன்று பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டது எனக் கூறி கடைகளை மூடி சீல் வைக்க முயன்றனர். அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தைத்தொடர்ந்து, சீல் வைக்கும் பணி கைவிடப்பட்டு உடனடியாக வரி மற்றும் வாடகை கைகளை செலுத்த அறிவுறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதேபோல், புதிய பஸ் நிலைய பகுதியில் ஒதுக்கீட்டை விட அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் எளிதில் பஸ் நிலையத்திற்குள் சென்று வர முடியவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பஸ் நிலையத்தில் ஆங்காங்கே இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்லும் என ஊர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அந்த இடங்களில் முறையாக பஸ்கள் வந்து நிற்பதில்லை. ஏனோதானோ என்று பல்வேறு இடங்களில் பஸ்கள் நின்று சென்று விடுகிறது. இதனால், பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுபோன்று பல்வேறு வசதிகளை பஸ் நிலையத்தில் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். தங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தரப்பில் கூறப்பட்டது.

Related Stories: