சவுதி இளவரசர் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு: பொய் வழக்கில் கைதாகி 604 நாட்கள் சவுதியில் சிறைவாசம்..! பெங்களூரு திரும்பிய ‘டெக்னீஷியன்’ கண்ணீர் பேட்டி

உடுப்பி: சவுதி இளவரசர் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக கூறி சவுதியில் கைது செய்யப்பட்ட டெக்னீஷியன், தற்போது விடுவிக்கப்பட்டதால் நாடு திரும்பி உள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் கண்ணீர் மல்க வரவேற்றனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிஜாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் பகேரா (34). இவர், சவுதி அரேபிய நகரமான டம்மனில் ஏர் கண்டிஷனர் டெக்னீஷியனாக பணிபுரிந்தார். கடந்த 2019 டிசம்பர் 22ம் தேதி அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக, அவரது மனைவி சுமன், உடுப்பி போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ஹரீஷ் பகேரா, இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தனது எதிர்காலத் திட்டம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துடன் பதிவு வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மற்றொரு பேஸ்புக் பதிவில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஒரு குறிப்பிட்ட  சமூகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்பட்டது. அதனால், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது. தொடர்ந்து, அவர் 604 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நீதிமன்ற விசாரணைகள் முடிந்து விடுவிக்கப்பட்டார். நேற்று அவர் பெங்களூரு வந்தடைந்தார். அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். இச்சம்பவம், விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, ஹரீஷின் மனைவி கொடுத்த புகாரின் பேரில், கடந்தாண்டு இதே வழக்கில் தட்சிணா கன்னடா மாவட்டம் முட்பித்ரி நகரைச் சேர்ந்த அப்துல் ஹியூஸ் மற்றும் அப்துல் தியூஸ் ஆகிய இரண்டு சகோதரர்களை உடுப்பி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஹரீஷ் தனது பேஸ்புக் கணக்கை மூடிய நாளில், மேற்கண்ட இரண்டு சகோதரர்கள் அவரது பெயரில் புதிய கணக்கை தொடங்கி உள்ளனர். அந்த கணக்கின் மூலம் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, சவுதி இளவரசர் குறித்த சர்ச்சை கருத்துகளை வெளியிட்டது தெரியவந்தது. இதுகுறித்து உடுப்பி எஸ்பி விஷ்ணுவர்தன் கூறுகையில், ‘சவுதியில் ஹரீஷ் கைது செய்யப்பட்டதற்கு காரணமான அப்துல் ஹியூஸ், அப்துல் தியூஸ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சின் மூலம் சவுதி அரசிடம் தேவையான ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. அதன் பிறகு நீதிமன்ற நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு 604 நாட்களுக்கு பின்னர் ஹரீஷ் விடுவிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: