இந்திய ஹாக்கி அணிகளுக்கு அடுத்த 10 ஆண்டுக்கு ஒடிஷா அரசு ஸ்பான்சர்

புவனேஸ்வர்: இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிதி உதவி அளிக்கும் ‘ஸ்பான்சராக’ ஒடிஷா அரசு தொடரும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளுக்கு ஒடிஷா அரசு சார்பில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது.  வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். இரு அணிகளுக்கும் தலா ரூ.10 லட்சம், பயிற்சி அலுவலர்களுக்கு தலா ரூ.5 லட்சம், ஹாக்கி இந்தியா அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியை முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார்.

அப்போது பேசிய பட்நாயக், ‘ஒலிம்பிக்கில் வரலாறு  படைத்த  இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் எழுச்சி  மற்ற விளையாட்டுகளுக்கும் ஊக்கமாகி, நாட்டுக்கு புகழ் சேர்க்கட்டும். அதுமட்டுமின்றி  இந்திய மகளிர், ஆடவர் அணிகளுக்கான  ஸ்பான்சர்ஷிப் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும்’ என்று அறிவித்தார்.

இந்திய ஹாக்கி அணிகளின் முக்கிய ஸ்பான்சராக ஒடிஷா மாநில அரசு உள்ளது. ஏற்கனவே 2018 பிப்ரவரி முதல் ஹாக்கி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மதிப்பு ரூ.140 கோடி. அந்த ஒப்பந்தம் 2023 ஜனவரியுடன் முடிகிறது. இந்நிலையில் அந்த ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகளுக்கு 2033ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா ஆதரவுடன்தான் இந்திய அணிகள் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில்  சாதித்தது என்றால் மிகையில்லை.

Related Stories: